பிக்பாஸ் 5 தமிழ் | Day 14 | Review | உண்மையில் ’அபிஷேக்’ தான் மக்களால் காப்பாற்றப்பட்டாரா?
பிக்பாஸ் 5 தமிழின் பதிநான்காம் நாளிற்கு உரிய காட்சிகள் சுவாரஸ்யமாக எழுத்துக்களாக இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. படித்து காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள்.
பிரியங்கா, அபிஷேக், நிரூப் மூவருக்கும் இடையிலான உரையாடல்களுடன் துவங்குகிறது பதிநான்காம் நாளிற்கான எபிசோடு. இசைவாணி நேற்றைய எபிசோடில், கமல் அவர்களிடம் ஹவுஸ்மேட்டால் ஒதுக்கப்படுது போல தோன்றுவதாக கூறி இருந்தாரல்லவா அது குறித்த உரையாடல் தான் அது. ’என்னடா டக்குன்னு ஒரு ஸ்லிப், அந்த ஸ்லிப் எனக்கு புரியவே இல்ல டா, இவ்ளோ நாள் விடு, நேத்து நைட் கூட நம்ம கிட்ட நல்லா பேசிட்டு ஜாலியா இருக்கு , உங்க கூட இருக்கும் போது ஹேப்பியா இருக்கு அக்கான்னுலா சொன்னாலே அது கூடவா அவளுக்கு நியாபகம் இருக்காது ’ ஏன் அப்புடி சொன்னா, என்று அபிஷேக்கிடம், இசைவாணி குறித்து புலம்பிக் கொண்டு இருக்கிறார் பிரியங்கா.
அத்தோடு கமல் அவர்களின் மேடைக்கு காட்சி செல்கிறது. மாஸ்சான என்ட்ரி, பேச்சினில் ஒரு தத்துவம் என்று முடித்துக் கொண்டு வழக்கம் போல அகம் டிவி வழியே அகத்திற்குள் காட்சியாய் நுழைகிறார் கமல் அவர்கள். ’பிக்பாஸ் பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், கொஞ்ச நஞ்சம் பார்த்தவர்கள் யார் யார்னு’ கமல் அவர்கள் உள்ளே கேள்வியை முன் வைக்கும் போது, ’அப்ப அப்ப பார்த்து கேட்டு தெரிஞ்சுக்குவேன் சார்னு’ அண்ணாச்சியும், ’பார்த்ததே இல்லங்க சார், கடைசியா கூப்புட்டதும் தான் ஒரு ரெண்டு மூனு எபிசோடு செல்லுல பார்த்தேன்னு’ தாமரையும் சொல்லிட்டு இருக்கும் போது ‘சத்தியமா பாத்ததே இல்லங்க சார்’னு ஒரு குரல் யாருன்னு பாத்தா, சினிமா பையன் அபிஷேக். டியர் சினிமா பையன், ஏற்கனவே நீங்க பிக்பாஸ் பத்தி பேசின வீடியோ இன்னமும் வைரல் ஆகிட்டு இருக்கு. அத கமல் சார் பார்த்துட போறாரு. அப்புறம் அதையே குறும்படம் ஆக்கி குத்து குத்துன்னு குத்திடுவாரு. இயாக்கி கிட்ட ‘இங்க ஸ்ட்ரேட்டஜியோட வந்தவங்கள விரல் விட்டு எண்ணிருவீங்கன்னு சொன்னீங்களே எங்க சொல்லுங்க பாப்போம்னு’ ஒரு கேள்விய முன் வைக்கிறார் கமல் அவர்கள். அவரும் அபிஷேக், நாடியா, நிரூப் என்று சொல்லி விட்டு ’பிரியங்கா கிட்ட ஸ்ட்ரேட்டஜி இருக்குற மாறி தெரில ஆனா சிரிச்சிக்கிட்டே கொளுத்தி போடுறாங்க’ன்னு தன்னோட பதில முன் வைக்கிறாங்க.
இமான் அண்ணாச்சியிடம் ‘நீங்க திட்டம், ஸ்ட்ரேட்டஜின்னு எந்த வார்த்தையும் உபயோக்கிக்கல, ஆனா அரசியல்னு ஏதோ சொன்னீங்களே அத பத்தி சொல்லுங்கன்னு’ கமல் அவர்கள் கேட்க தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் பதில் அளித்தார் அண்ணாச்சி. ‘இங்க குரூப் குரூப்பா இருக்காங்கன்னு நினைக்கிறீங்களான்னு’ கமல் அவர்கள் அடுத்தும் ஒரு கேள்வியை கேட்க ‘இது வரைக்கும் இல்ல, ஆனா வர்ற திங்கள் கிழமைல இருந்து வந்திரும்னு நினைக்கிறேன் சார்னு’ அண்ணாச்சி சொல்லவும் சிரிப்பொலி இல்லத்திற்குள் அதிருகிறது. வட்டார வழக்கு, தமிழ்னு பிக்பாஸ் பத்தி பேசுற மாறியே பேச்சுகளுக்குள், அப்ப அப்ப கொஞ்சம் அரசியலையும் தூவிக்கிறார் கமல் அவர்கள். அடுத்ததாக வருண், அபினய் பற்றிய கதைகள் குறித்து பேச ஆரம்பித்தார் கமல், ’பெரும்பாரம்பரியத்தின் நிழலில் இருந்து வந்தவர்கள் நீங்கள், அந்த நிழல் உங்களை காக்கும், ஆனால் உங்களின் வளர்ச்சியையும் அது தடுக்கும், உங்களின் தனித்துவத்தை காண்பிக்க அந்த நிழலில் இருந்து விடுபட்டு வந்திருக்கிறீர்கள், காண்பியுங்கள், அதற்கான மேடை தான் இது’ என்ற கோரிக்கையுடன் வருண், அபினய் கதை குறித்த உரையாடலை முடிக்கிறார் கமல் அவர்கள். ‘கிடைக்கும் சிறிய வாய்ப்பிலும் பெரிய உழைப்பை இட்டால் அதுக்கான ரிசல்ட் நல்லாவே இருக்கும்னு’ சிபி சொன்ன கதையின் உள்அர்த்தங்களையும் தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு மகிழ்ந்தார் கமல்.
நாடியா அவர்களின் கதையைப் பற்றி பேசும் போது ‘நீங்க எப்புடி பாப்புலரோ, இப்ப பாப்புலர் ஆகிட்டு இருக்கீங்களோ அதே அளவுக்கு இந்த மேடைல உங்க கணவரையும் பாப்புலரா ஆக்கிட்டீங்க, அந்த அளவிற்கு நீங்கள் சொன்ன கதை மூலம் உங்கள் கணவர் எங்கள் மனதில் பதிந்து விட்டார்’ என எடுத்துரைக்கிறார் கமல். நன்றியுடன் அந்த கதை குறித்த உரைடாடலை முடித்து வைக்கிறார் நாடியா. அபிஷேக் அவர்களின் கதையைப்பற்றி கமல் அவர்கள் பேசும் போது, அவரின் தனித்துவ சாதனைகளையும், மைனஸ் என்ற நிலையில் இருந்து ஜீரோ அதற்கு அப்புறம் ப்ளஸ் என்று உழைப்பால் படிப்படியாக அவர் உயர்ந்த விதத்தையும் பற்றி விவரித்து பெருமை கொள்கிறார். ’16 கதைகளில் மனதை தொட்டவை, மனதில் ஒட்டாதவை எது’ என்று கமல் அவர்களின் மூலம் போட்டியாளர்களிடம் ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது. முதலில் பிரியங்கா, மனதை தொட்ட கதையாக நாடியாவின் கதையை கூறுகிறார். காரணம் நாடியாவின் சாதனைக்கு பின்னால் இருக்கும் அவரின் கணவரை, அவரின் கதையில் அவர் விவரித்த விதம் என்று கூறுகிறார். மனதில் ஒட்டாத கதையாக அக்ஷாராவின் கதையைக் கூறுகிறார் காரணம் ’என்னோட வாழ்க்கையையும் அவரின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை’ என்ற கருத்தை முன் வைக்கிறார்.
வருண், மனதை தொட்ட கதையென அபிஷேக்கின் கதையைக் கூறுகிறார். மனதுக்கு ஒட்டாத கதையென சிபியின் கதையைச் சொல்கிறார். அதற்கு பின் அபிஷேக், மனதை தொட்ட கதையென பவ்னியின் கதையைச் சொல்கிறார். அன்பு வைத்த கணவரின் இழப்பு, இழப்பிற்கு பின் தனிமை, போகிற பாதை தெரியாமல் பயணம் என்ற பவ்னியின் வாழ்க்கை கதையில் உள்ள உருக்கங்களை கூறி அதுவே மனதிற்கு நெருக்கமான கதையாக அமைந்ததாக சொல்கிறார் அபிஷேக். மனதிற்கு ஒட்டாத கதையென மதுமிதாவின் கதையை சொல்கிறார் அபிஷேக், காரணம் ’மதுமிதாவின் கதைக்குள் தான் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்னுடைய கதையும் அப்படித்தான் அதுனால அது எனக்கு உரைக்கவே உரைக்காது’ என்ற காரணத்தை கூறி முடிக்கிறார். அதற்கு பின் நிரூப், மனதை தொட்ட கதையென நமீதாவின் கதையை சொல்கிறார். மனதுக்கு ஒட்டாத கதையென பிரியங்காவின் கதையை சொல்கிறார். சிபி, மனதை தொட்ட கதையென நமீதாவின் கதையை சொல்கிறார். மனதிற்கு ஒட்டாத கதையென நாடியாவின் கதையை சொல்கிறார். அபினய், மனதை தொட்ட கதை என்று அபிஷேக்கின் கதையை சொல்கிறார். மனதுக்கு ஒட்டாத கதை என்று சிபியின் கதையை சொல்கிறார். அண்ணாச்சி, மனதை தொட்ட கதையென ராஜூவின் கதையை சொல்கிறார். மனதுக்கு ஒட்டாத கதையென நாடியாவின் கதையை சொல்கிறார்.
ராஜூ, மனதை தொட்ட கதையென அண்ணாச்சியின் கதையை சொல்கிறார். ’வலியை கூட சிரித்துக்கொண்ட அண்ணாச்சி சொன்ன விதம்’ என்ற காரணத்தை முன் வைத்து தேர்ந்தெடுத்ததாக சொல்கிறார். மனதுக்கு ஒட்டாத கதை என வருணின் கதையை முன் வைத்தார். அடுத்ததாக இயாக்கி மனதை தொட்ட கதை என அபிஷேக்கின் கதையை சொல்கிறார். மனதுக்கு ஒட்டாத கதை என சிபியின் கதையை முன் வைத்தார். பவ்னி, மனதை தொட்ட கதை என இசைவாணியின் கதையை சொல்கிறார். மனதுக்கு ஒட்டாத கதை என வருணின் கதையை முன் வைத்தார். தாமரை, மனதை தொட்ட கதை என நமீதாவின் கதையை சொல்கிறார். ’நாடியா, மது, இயாக்கி சொன்ன கதைகள் புரியவில்லை’ அதனால் மனதுக்கு ஒட்டாத கதை அவர்களுடையது என்று தாமரை சொல்லி முடித்தார். நாடியா, மனதை தொட்ட கதை என நமீதாவின் கதையை சொல்கிறார். மனதுக்கு ஒட்டாத கதை என சிபியின் கதையை சொல்கிறார்.
அதற்கு பின் மதுமிதா, மனதை தொட்ட கதை என அக்ஷாராவின் கதையை சொல்கிறார். மனதுக்கு ஒட்டாத கதை என ’சொன்னவை புரியாத காரணத்தால்’ மட்டும் தாமரையின் கதையைச் சொல்வதாக சொல்கிறார். சின்ன பொண்ணு அம்மா, மனதை தொட்ட கதை என நமீதாவின் கதையை சொல்கிறார். மனதுக்கு ஒட்டாத கதை என நிரூப்பின் கதையை சொல்கிறார். அக்ஷாரா, மனதை தொட்ட கதை என சிபி,மதுவின் கதையை சொல்கிறார். மனதுக்கு ஒட்டாத கதை என இசை மற்றும் சுருதியின் கதையை சொல்கிறார். இசைவாணி, மனதை தொட்ட கதை என தாமரையின் கதையை சொல்கிறார். மனதுக்கு ஒட்டாத கதை என வருண் அவர்களின் கதையைச் சொல்கிறார். சுருதி, மனதை தொட்ட கதை என பிரியங்கா, அபிஷேக், இசைவாணியின் கதைகளைச் சொல்கிறார். மனதுக்கு ஒட்டாத கதை என வருண், சிபி, அபினய், அக்ஷாரா, மதுவின் கதைகளைச் சொல்கிறார். ‘எப்படா முடியும்ங்கிற அளவுக்கு இந்த தொட்ட கதை, ஒட்டாத கதைக்கான பதில்கள் இருந்துச்சு, இந்த எபிசோடயும் கொஞ்சம் சிதைச்சிருச்சு, ஒரு நல்ல சீன கட் பண்ணிட்டு 40 விளம்பரம் போட்டா எப்படி இருக்கும் அப்படி இருந்துச்சு’ வாத்தியாரே முடில வாத்தியாரே இனிமே இப்படியெல்லாம் கேள்விய கேக்காதீங்க. முடில.
’ஹப்பாடா! இப்பவாச்சு எலிமினேசன் பிராசஸ்க்கு வந்தாரே’ என்று பெருமூச்சு விடும் அளவுக்கு எலிமினேசன் பிராசஸ்சை தொடங்கினார் கமல் அவர்கள். அதற்கு முன்னதாக இல்லத்திற்குள் இத்தனை நாட்களாக நீங்கள் பார்த்தவருள் மிளிர்ந்தவர்கள் யார், காணாமல் போனவர்கள் யார் என்பதை தேர்ந்தெடுக்க, அமைக்கப்பட்ட குழுவிடம் அதற்கான ரிசல்ட்டுகளை கேட்கிறார் கமல். காணாமல் போனவர்கள்னு சின்ன பொண்ணு அம்மாவையும், நாடியாவையும் அறிவித்து விட்டு, இல்லத்திற்குள் மிளிர்ந்தவராக அண்ணாச்சியையும் அறிவிக்கிறது அபிஷேக் குழு. தீர்ப்பின் முடிவுகளை பற்றி சின்ன பொண்ணு அம்மாவிடம் கமல் கேட்ட போது ‘இசை சொன்ன மாதிரியே தான் எனக்கும் நடந்துச்சு சார், யாராச்சு பேசிட்டு இருக்கும் போது நான் போய் அங்க நின்னா அமைதியாய்டுறாங்க, அதுனால அந்த பக்கம் போறதுக்கும், அவங்கட்ட மறுபடி பேச்சு கொடுக்குறதுக்கும் ஒரு மாறி இருக்கு, பெரும்பாலும் தனிமையிலயே தான் இருக்கேன், முதல் நாள் வந்த மாறி இல்ல’ என்று தன்பக்கம் உள்ள நியாயங்களை சின்ன பொண்ணு அம்மா எடுத்துரைத்தார். ’என்ன நோட்டீஸ் பண்ணிகிட்டே இருந்துட்டு தானே, நான் காணாம போயிருக்கேன்னு சொல்றாங்க, அப்ப நான் காணாம போகலே தானே’ என்று குதர்க்கமாக பதில் சொல்லி அபிஷேக் குழுவின் அறிவிப்புக்கு எதிர்வினை தொடுத்தார் நாடியா.
அதற்கு பின் எலிமினேசன் பிராசஸ் மீண்டும் தொடங்குகிறது. ஐவருள் (அபிஷேக், சின்ன பொண்ணு, நாடியா, வருண், மதுமிதா) வருண் முதலில் தக்க வைக்கப்படுவதாக அறிவிக்கிறார் கமல். அதற்கு பின் ’நீங்க என்னிக்குமே மக்கள் மத்தில காணாம போகவே மாட்டீங்க’ என்ற தேற்றுதலுடன் சின்ன பொண்ணு அம்மா தக்க வைக்கப்படுவதை அறிவிக்கிறார் கமல் அவர்கள். அடுத்தாக மிச்சம் இருக்கும் அபிஷேக், நாடியா, மதுமிதாவினுள், மது காப்பாற்றப்படுவதாக கமல் அறிவிக்கிறார். இன்னமும் பதை பதைப்பு இல்லத்திற்குள் தொற்றிக் கொள்கிறது. மிச்சம் இருப்பது நாடியாவும், அபிஷேக்கும் மட்டும் தான். இடைவெளி விட்டு கமல் காட்சியில் இருந்து அகல்கிறார். அதற்கு பின் அபிஷேக் ஏன் ராஜூவை மிளிர்ந்தவராக தேர்ந்தெடுக்கவில்லை என்று ராஜூவிடமே ஒரு கம்பி கட்டுற கதையை அளந்து விட்டுக்கொண்டிருந்தார். எதை எதையோ சொல்லி ராஜூ, ராஜூவாக இருப்பதை தகர்த்து விடுவார் போல அபிஷேக். மீண்டும் கமல் அவர்களின் மேடை காட்சிக்குள் வருகிறது. இன்றைய புத்தக அறிமுகத்தில் ‘வானமாமலை’ அவர்கள் எழுதிய ‘தமிழர் நாட்டுப்பாடல்கள்’ என்ற புத்தகத்தின் பெருமைதனை கூறி மக்களுக்கும் அதை பரிந்துரைத்தார். அதற்கு பின் மீண்டும் எலிமினேசன் பிராசஸ் தொடங்குகிறது. சஸ்பென்ஸ் ஏதும் வைக்காமல் ‘நாடியாவே வெளியேறப்போகிறார்’ என்பதை போட்டுடைத்தார் கமல் அவர்கள். அபிஷேக் இல்லத்திற்குள் தக்க வைக்கப்பட்டார்.
மீண்டும் காட்சிகள் இல்லத்திற்குள் வந்தது. கலகலப்பாக இருந்த இல்லத்திற்குள் முதல் முதல் இசைவாணி வந்த போது எந்த அமைதி நிலவியதோ அப்படி ஒரு அமைதி. அதற்கு பின் சூழலை புரிந்து கொண்டு ஹவுஸ்மேட்ஸ் நாடியாவிற்கு ஆறுதல் வார்த்தைகள் உரைத்து ’சாஃ சாஃங்’ என்ற பிஜிஎம்முடன் வழி அனுப்பி வைத்தனர். எங்கிருந்து அவர் பிக்பாஸ் பயணத்தை தொடங்கினாரோ அதே மேடைக்கு மறுபடியும் வந்தடைந்தார் நாடியா. ‘நீங்கள் நினைத்ததை விட 10000 மடங்கு பேர் உங்களை இந்நேரம் கவனித்து இருப்பார்கள், முதலில் வெளியேறுகிறோமே என்று நினைக்காதீர்கள், உள்ளிருப்பவர்களை விட நீங்கள் தான் முதலில் புகழை நோக்கி முதல் அடி எடுத்து வைக்க போகிறீர்கள் என்று நேர்மறையாக எண்ணிக் கொள்ளுங்கள்’ என்று கமலும் ஆறுதல் கூறி, அவரின் பயண வீடியோவையும் போட்டு காண்பித்து, புன்னகை, கண்ணீர் என்ற இரண்டும் கலந்த கோலமாகி நின்ற, நாடியாவை வழி அனுப்பி வைத்தார். ’எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று கூறிக் கொண்டு கமலும் அத்தோடு விடைபெற்றார்.
அதற்கு அப்புறம் மீண்டும் காட்சி இல்லத்திற்குள் புகுகிறது. குரூப்பிசம் குரூப்பிசம்னு குரூப் குரூப்பா உக்காந்து பேசிக்கிறாங்க. அந்த குரூப்குள்ள ராஜூவ மட்டும் தான் பாக்க முடில. தனியா விளையாடுறாரு போலமனுஷன். அபிஷேக்-ராஜுவோட அந்த காலத்து Fight ப்ராக்டீஸ் செம்ம. கூடிய சீக்கிரம் அந்த Fight-லா ஒரிஜினலாவே நடக்கும்னு தோனுது. எதையாச்சு ஒன்ன நியாயப்படுத்த கத்தி கத்தி பேசுறத வாடிக்கையாவே வச்சு இருக்குறாரு அபிஷேக். பவ்னி கிட்ட ஒன்னும் இல்லாத இரு விஷயத்துக்காக காட்டு கத்து கத்துறாரு. நார்மலாவே கதகளி ஆடிட்டு தான் இருக்காரு. இதுலா தனியா வேற கதகளி ஆடி பாக்கனுமா. ’நான் இன்னும் ஆடவே ஆரம்பிக்கல, ஆரம்பிச்சா ஒரு பைய உள்ள இருக்க மாட்டான்னு’ டையலாக்லாம் சொன்னாரு அபிஷேக். இன்னிக்கு கொஞ்சம் விட்டுருந்தா அவரே உள்ள இருந்திருக்க மாட்டாரு. பாவம் நாடியா வெளிய போயிட்டாங்க. இருந்தாலும் கடைசியா தான் அபிஷேக் காப்பாற்றப்பட்டாரு. அத அவர் புரிஞ்சிக் கிட்டு இனியாச்சும் கதகளி, பரத நாட்டியம்லா ஆடாம ஒழுங்கா கேம் மட்டும் ஆடுவாருன்னு எதிர்பார்ப்போம்.
” ஹைலைட்ஸ் : போர் அடித்த மனதை தொட்ட கதை, ஒட்டாத கதை,மிளிர்பவராக அண்ணாச்சி, நாடியாவின் வெளியேற்றம், அபிஷேக்கின் கதகளி என்று ஓரளவுக்கு தான் ஸ்கோர் செய்திருக்கிறது இன்றைய எபிசோடு. எலிமினேசனில் மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமடைந்து இருப்பதாக இணையம் கிசு கிசுக்கிறது. பார்க்கலாம். இன்னும் வாரங்கள் இருக்கிறதல்லவா. பொறுத்திருந்து பார்க்கலாம் “