பெண் சுதந்திரத்தை பற்றி பேசுகிற பல பெண்களும், வீட்டில் ஒரு ஆணுக்கு துளி கூட சுதந்திரம் கொடுப்பதில்லை என்பது இப்போது தான் புலப்படுகிறது!
பொதுவாக ஒரு காதலில், அன்பில் இருவருக்குமான சுதந்திரம் என்பது அவசியமாகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு தான் அன்பிலும், காதலிலும், திருமணத்திலும் சுதந்திரம் என்பது கிடைப்பதில்லை என பொதுவான ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் தற்போதைய காலத்தில் அது உண்மை இல்லை. ஆண்களுக்கு தான் ஒரு அன்பிலோ, காதலிலோ, திருமணத்திலோ சுதந்திரம் கிடைப்பது இல்லை போல.
ஒரு பெண் தனக்கான வேதனைகளை எப்படியாவது இந்த சமூகத்தினுள் கொண்டு சேர்க்கிறாள், ஆனால் ஆண் அப்படி இல்லை எத்துனை வேதனைகளை அனுபவித்தாலும் அதை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு சமூகத்திற்குள் விவாதிக்க வேண்டிய விடயமாக, அதை கொண்டு சேர்க்க மறுக்கிறான். அதனால் தான் ஏனோ ஒரு ஆண் கணவனாக, காதலனாக படும் அவஸ்தைகள் இங்கு யாருக்கும் தெரிவதில்லை.
ஒரு ஆண் கணவனாக, காதலனாக ஒரு பெண்ணின் அடிப்படையான சுதந்திரங்களில் தலையிடுவது எப்படி தவறோ, அது போல ஒரு பெண் மனைவியாக, காதலியாக ஒரு ஆணின் அடிப்படையான சுதந்திரங்களில் தலையிடுவதும் தவறு தான், அன்பின் ஆதிக்கம் ஒரு காதலில், இல்லற வாழ்வினில் இருக்கலாம், ஆனால் ஆதிக்கம் தான் அன்பு என்ற வகையில் இருக்கவே கூடாது.
பெரும்பாலும் இன்றைய பெண்கள் ஆதிக்கத்தையே அன்பென நினைக்கிறார்கள். தனக்கு தேவையான அன்புகளை, தனக்கு தேவையான நேரங்களை, தனக்கு தேவையான ஒன்றை தான் செலுத்தும் ஆதிக்கத்தின் வாயிலாக பெற்று விடலாம் என்பது என்றுமே அன்பு ஆகாது. இந்த ஆதிக்க உணர்வு என்பது இன்றைய சூழலில் பெண்களிடமே அதிகமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
“ ஒரு பெண் தன் மீது பிறர் செலுத்தும் ஆதிக்கத்தை உடனடியாக வெளிப்படுத்தி விடுகிறாள், ஆனால் ஒரு ஆண், தன் மீதான ஆதிக்கத்தை எப்போதுமே வெளிப்படுத்துவதில்லை. அவ்வாறு ஒரு ஆண் வெளிப்படுத்தினால் இங்கு ஆகப்பெரும் ஆதிக்கவாதியாக பெண்ணே அறியப்படுவாள் “