தவமாய் தவமிருந்து | Serial Review | ‘தற்போதைய சீரியல்களுள் நிஜங்களை நிஜங்களாகவே சொல்கின்ற ஒரு தொடர்’
ஜீ தமிழில் தினமும் ஒளிபரப்பாகும் ‘தவமாய் தவமிருந்து’ தற்போது அனைத்து ரக ரசிகர்களையும் இழுத்து தன் பக்கம் வைத்து இருக்கிறது. அதைப் பற்றி ஒரு ரிவ்யூவாக பார்க்கலாம்.
குடும்பங்களுக்குள் நடக்கும் ஒரு வித யுத்தம் என்றே இந்த தொடரை சொல்லலாம். பொதுவாக சீரியல் என்றாலே நிஜத்திற்கு மிஞ்சியதாக தான் இப்போதெல்லாம் இருக்கிறது. ஆனால் இந்த சீரியல் மட்டும் அதற்கு விதி விலக்கு. ஒரு எளிய குடும்பத்தின் நிஜங்களை நிஜங்களாவே சொல்வதால் தான் ஏனோ இந்த சீரியல் பல தரப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் வெகுவாக இழுத்து இருக்கிறது.
அதிலும் மார்க்கண்டேயனாக வரும் பசங்க சிவகுமார் நடிப்பில் பின்னி பெடலெடுக்கிறார். நடிகர்கள் தேர்வும் இந்த சீரியலின் ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். சீதாவாக அனிதா நாயர், சீதாவின் மூத்த மகன் ராஜாவாக மகேஷ், சீதாவின் இரண்டாவது மகன் ரவியாக பாண்டி கமல், ராஜாவின் மனைவி மேகலாவாக நிரோஷினி, ரவியின் மனைவி உமாவாக யாழினி, சீதாவின் மகள்களாக கருணா விலாஷினி, சந்தியா என்றும் ஒவ்வொருவரும் நடிப்பிற்கு மெனக்கெடுகின்றனர்.
அவர்களாக நடித்து இருந்தால் அவர்களாக தான் தெரிந்து இருப்பார்கள். அவர்கள் கதாபாத்திரமாக நடிக்கிறார்கள். அது தான் இந்த சீரியலை தூக்கி நிறுத்துகிறது. ஒரு குடும்பம் என்றால் அதில் கஞ்சம் செய்பவர் இருப்பார், தண்டமாக ஒருவர் இருப்பார், பிடிவாத மருமகள்கள் இருப்பார்கள், பாசக்கார அம்மா ஒருவர் இருப்பார், இதையெல்லாம் சமாளித்து குடும்பத்தை நிலை நிறுத்துகிற ஒரு அப்பா இருப்பார்.
இதையெல்லாம் உணர்ந்து ஒரு கதை எழுதி அதை படமாக எடுப்பது கூட எளிது தான். ஆனால் ஒரு தொடராக எழுதுவது மிகவும் சிரமம். அதை எழுத்தாக, இயக்கமாக என திரையில் நம்மால் உணரும் வண்ணம் வடிவமைத்த பெருமை அதற்கு பின்னால் இருந்து உழைத்த, உழைத்துக் கொண்டு இருக்கும் கிருத்திகா, மலர் வாணன், செல்வராஜ், பிரதாப் மணி ஆகியோரையே சேரும்.
“ தொடர்ந்து கதை களத்தை இதே சுவாரஸ்யத்துடன் நகர்த்துங்கள். இன்னும் பல நாட்கள் இந்த தொடர் குடும்ப உண்மைகளை உடைத்து நிஜங்களை மட்டுமே பேச வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை “