குறைத்து காண்பிக்கப்படுகிறதா கொரோனோ தொற்று…?
தொடர்ந்து நாற்பதாயிரத்தில் நிலையாக நின்று வந்த கொரோனோ தொற்று கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து வந்தது. ஆனால் மருத்துவ வல்லுநர்களோ தொற்று அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் புள்ளி விவரங்கள் குறைவாக காண்பிக்கப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை நிபுணர் ரிஜோ எம் ஜான் கூறுகையில் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வந்ததாகவும், அதன் விளைவாக கடந்த இரண்டு வாரங்களாக அரசு பரிசோதனைகள் செய்வதை, 35 சதவிகிதத்திற்கும் மேல் குறைத்திருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். இதற்கு முன் 12 சதவிகிதமாக இருந்த தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் கடந்த இரு வாரங்களில் 16 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
கொரோனோ பாதிப்பை மக்களிடம் குறைத்து காண்பிப்பது இந்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு பெரிய தீர்வாக இருக்காது. இது அவர்களை இலகுப்படுத்தி அசால்ட்டான சூழலுக்கு தள்ளும். விளைவுகள் விபரீதத்தில் தான் முடியும். உண்மையான புள்ளி விவரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் அப்போது தான் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க நினைப்பார்கள் என்று சுகாதாரத்துறை நிபுணர் ரிஜோ எம் ஜான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“ தொற்றை குறைத்து காண்பித்தால் தொற்று குறைந்து விடுமா? இது எந்த வகையில் தீர்வாகும் இது இன்னமும் பெரியதொரு பாதிப்பிலேயே அல்லவா கொண்டு போய் விடும் என்று சமூக வலைதளங்களில் பலரும் சலசலத்து வருகின்றனர் “