நேர்மையின் சிகரமாக அறியப்படும் காமராஜர், ஏன் அவர் தொகுதி மக்களாலே தோற்கடிக்கப்பட்டார்?
தேசிய அளவில் தலைசிறந்த தலைவராக அறியப்படும் தலைவர் காமராஜர் அவர்கள் அவரது சொந்த தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார். ஏன், எதற்காக, யாரால் காமராஜர் என்னும் தலைமை தோற்கடிக்கப்பட்டது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
அசைக்க முடியாத காமராஜர்
மூன்று முறை, கிட்ட தட்ட 9 வருடம் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணியாற்றியவர் காமராஜர். அவரது எளிமை, நேர்மை, தொலைநோக்கு பார்வை இந்த மூன்றின் மீதும் நம்பிக்கை வைத்து எளிய மக்கள் அனைவரும் அவரின் பின்னால் நின்றனர். பெரிதாக அடுக்கு மொழியில் பேச தெரியாதவர், ஆனால் கூட அனைத்தையும் சொல்லாமலே செயலாக மாற்றும் வல்லமை படைத்தவர். அவர் கொண்டு வந்த மதிய உணவுத்திட்டம் பல குழந்தை தொழிலாளர்களை மாணவர்க்ளாக உருமாற்றியது. 27,000 புதிய பள்ளிகள் அவரது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டன.
அவர் ஆட்சி காலத்தில் பொருளாதாரத்திலும் பல மாநிலங்களை தமிழகம் விஞ்சி நின்றது. அவ்வளவு பெரிய தேசிய கட்சியான காங்கிரஸ்சே இவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு நிற்கும் அளவிற்கு பெரும் வல்லமை பெற்றவராக காமராஜர் விளங்கினார். இவ்வளவு நேர்மை, இப்படி ஒரு தலைமை என எல்லாம் இருந்தும் கூட 1967-யில் நடந்த தேர்தலில் அவரது சொந்த தொகுதியில் போட்டியிட்ட காமராஜர், அவரது சொந்த தொகுதி மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டார் என்பது இன்றளவும் பேசக்கூடிய கருப்பொருளாகி வருகிறது.
சரி, ஏன் காமராஜர் தோற்கடிப்பட்டார்?
கே திட்டம்
என்ன தான் காமராஜர் என்னும் தனித்தலைமை நேர்மையானதாக இருந்தாலும் கூட அவர் இருந்த கட்சியின் செயல்பாடுகள் தான் காமராஜரின் தோல்விக்கு பெரிதும் காரணமாக சொல்லப்படுகிறது. தேசிய அளவில் காங்கிரஸ் எடுத்த ஒரு சில தவறான முடிவுகளால் கட்சியின் அடித்தளம் ஆட்டம் கண்டது. இதனால் காமராஜர் காங்கிரஸ் மேலிடத்திடம் கூறி கே – திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதாவது காங்கிரஸ்சின் பெரிய பெரிய தலைவர்கள் பதவி விலகி கட்சிக்காக வீதியில் களம் இறங்கி கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது தான் அத்திட்டம். காங்கிரஸ் மேலிடமும் இதற்கு ஒப்புதல் அளிக்க, கையோடு முதல்வர் பதவியில் இருந்து தானே விலகி முதல்வர் பொறுப்பை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து கட்சியை பலப்படுத்த எல்லா பக்கமும் வீதி வீதியாக சென்று பரப்புரை செய்தார்.
நெருக்கடியான ஒரு சூழலில் காமராஜர் என்னும் தலைமையை நம்பி ஓட்டு போட்ட அத்துனை மக்களுக்கும், காமராஜர் பதவி விலகி, பக்தவத்சலத்தை முதல்வர் ஆக்கியது பிடிக்கவில்லை. இதனால் மக்களிடையே காமராஜர் என்னும் தலைமை மீது பாசத்தோடு ஒரு கோபம் தொற்றிக் கொண்டது. இதையே பிரச்சாரம் ஆக்க முற்பட்ட எதிர்கட்சிகள் ஒரு நெருக்கடியான சூழலில் கட்சியின் நன்மைக்காக நாட்டு மக்களை நடுவில் விட்டு பதவி விலகி விட்டார் காமராஜர் என வெறுப்பு பிரச்சாரம் செய்ய செய்ய துவங்கினர். இது தான் காமராஜரின் 1967 தேர்தல் தோல்விக்கு முதல் காரணமாக கூறப்படுகிறது.
ஹிந்தி எதிர்ப்பு, உட்கட்சி பூசல்
அன்று தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு பரவலாக கிளம்பி இருந்தது. காங்கிரஸ் ஹிந்தி திணிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்ததால் அவர்களின் அந்த அடாவடி செயல் காமராஜரின் பெயரையும் பாதித்தது. இது போக எதிர்க்கட்சிகள் தான் ஜெயிக்க வேண்டும் என்பதை விட காமராஜரை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் வெறுப்பு பிரச்சாரங்களை சரமாரியாக கையாண்டனர். இதற்கு காங்கிரஸ்சில் இருந்த ஒரு சிலரும் உடன்பட்டதாக கூறப்படுகிறது. பதவி ஆசையில் காங்கிரஸ்சில் இருந்த பலருமே காமராஜருக்கு எதிராக செயல்பட்டதும் அவரது தோல்விக்கு காரணங்களாக கூறப்படுகிறது.
அடுக்கு மொழி மோகம், சினிமா மோகம்
நல்லாட்சி என்பதன் அர்த்தமாக விளங்கிய காமராஜர், பெரும்பாலும் மேடைப் பேச்சுகளில் எளிமையான தமிழில் தான் பேசுவார். ஆனால் அவருக்கு எதிராக அன்று இருந்தவர்கள் எல்லாம் நன்கு படித்தவர்கள். மக்களை எளிதாக மூளைச்சலவை செய்யும் வல்லமை பெற்றவர்கள். அடுக்கு மொழியில் வசனம் பேசுபவர்கள், செயலை மட்டுமே குறிக்கோளாக கொண்ட காமராஜருக்கு அடுக்குமொழி எல்லாம் பழக்கமில்லை, இன்னொன்று அக்காலக்கட்டத்தில் மக்களை சினிமா மோகம் வெகுவாக சூழ்ந்திருந்தது. சினிமாவில் பேசும் வசனங்களை எல்லாம் அப்படியே நம்பிவிடும் எளிய மக்கள் கூட்டம் அதனிடத்தில் காமராஜரின் எளிமை பெரிதாக மதிக்கப்படவில்லை. இதுவும் காமராஜரின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
தோல்விக்கு பின் வெற்றி!
என்ன தான் 1967 தேர்தலில் காமராஜர் தோல்வி அடைந்து இருந்தாலும் கூட, அதற்கு பின் 1971 காலக்கட்டத்தில் நாகர்கோவில் தொகுதியில் நின்று இரண்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்று இருக்கிறார். 1937 முதல் 1971 வரை காமராஜர் பங்கேற்ற தேர்தலில் 1967 தவிர அனைத்து தேர்தலிலும் காமராஜர் வெற்றி பெற்று இருக்கிறார். ஆனாலும் கூட அவர் பெற்ற அத்துனை வெற்றிகளைக் காட்டிலும் அவர் அடைந்த அந்த ஒரு தோல்வி தான் அதிகமாக இங்கு பேசப்பட்டு வருகிறது.
“ அவர் பெற்ற அந்த ஒரு தோல்வியை மட்டுமே பேசி பேசி அதிகம் ஆராயாமல், அவர் பெற்ற பல வெற்றிகளையும், அவரின் தலைமைப் பண்புகளையும் நாளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம் “