புதிய கல்வி கொள்ளையை எதிர்க்கும் தமிழக அரசு, புதிய கல்வி கொள்கையின் கீழ் வரும் PM SHRI பள்ளிகளை ஆதரிப்பது ஏன்?
புதிய கல்வி கொள்கையை நான்கு வருடங்களாக கடுமையாக எதிர்த்து வந்த ஆளும் தமிழக அரசு, புதிய கல்வி கொள்கையின் கீழ் வரும் PM SHRI பள்ளிகளை திடீர் என ஆதரிப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முதலாவதாக புதிய கல்வி கொள்கை (NEP 2020) என்பது என்ன?
புதிய கல்வி கொள்கை என்பது தேசத்தின் கல்வி தரத்தை உலகளாவிய அளவில் மேம்படுத்த ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் ஆகும். திட்டத்தின் நோக்கம் சரியாக இருந்தாலும் கூட, திட்டத்தின் ஒரு சில அம்சங்கள் மாநிலக் கல்வி உரிமையை முழுமையாக பறிப்பதாக இருப்பதால் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து இந்த புதிய கல்வி கொள்கையை கடுமையாக எதிர்த்து வந்தன.
சரி, இந்த புதிய கல்வி கொள்கையின் கீழ் வரும் PM SHRI பள்ளிகள் என்பது என்ன?
ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையின் கீழ், தேசம் முழுக்க 14,500 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பள்ளிகள் PM SHRI School அமைப்பாக அறிவிக்கப்பட்டு அந்த பள்ளியின் கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் ஏனைய வசதிகள் என அனைத்தும் மேம்படுத்தப்படும்.
அதாவது முதலாவதாக அந்த பள்ளியில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும். பின்னர் அந்த பள்ளிக்கு தேவையான அத்துனை வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும். முழுக்க முழுக்க நவீன முறையில் பாடம் எடுக்கும் வகையில் டிஜிட்டல் போர்டுகள், சோலார் திட்டங்கள், நவீனப்படுத்தப்பட்ட வகுப்புகள் என அத்துனையும் இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பள்ளிக்கு செய்து கொடுக்கப்படும் என்பது இந்த திட்டத்தின் வரையறை ஆகும்.
இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு இதுவரை 28,000 கோடி வரை ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய கல்வி கொள்கையை எதிர்த்த ஆளும் தமிழக அரசு, திடீரென PM SHRI பள்ளிகளுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன்?
புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு, புதிய கல்வி கொள்கையின் கீழ் வரும் PM SHRI பள்ளிகளுக்கு மட்டும் ஏன் ஆதரவு என்பது குறித்து தமிழக கல்வி அமைச்சகத்திடம் விளக்கம் கேட்ட போது, ஒரு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. மத்திய அரசு விடுவிக்காமல் இருக்கும் நிதியை தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டுமானால், ஒன்றிய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு அழுத்தம் கொடுப்பதாக கூறுகின்றனர்.
சரி, இந்த PM SHRI பள்ளிகள் தமிழகத்திற்கு வந்தால் என்ன ஆகும்?
இந்த PM SHRI பள்ளிகள் வந்து விட்டாலே புதிய கல்வி கொள்கையும் சேர்ந்தே வந்து விடும் என ஒரு சில கல்வியாளர்கள் கூறுகின்றனர். காலம் காலமாக இரு மொழிக் கோட்பாடுகளில் செயல்பட்டு வரும் கல்வி கொள்கையில் மும்மொழிக் கோட்பாடு புகுத்தப்படும் என்றும், பள்ளிகளில் ஹிந்தி எளிதாக திணிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. குருகுலக்கல்விகள், மதராசா, பாடசாலை உள்ளிட்ட பழையகால நடைமுறைகளும் இந்த புதிய கல்வி கொள்கையின் கீழ் இருப்பதால், இது கல்வியை சாதி மத அடிப்படையில் பிளவு படுத்திவிடும். இது போக கல்வியில் மாநில அரசின் உரிமை முழுவதும் பறிக்கப்படும் என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
முடிவாக,
“ பள்ளிகளை மேம்படுத்துவதற்காக நிதி வருகிறது என்று, PM SHRI பள்ளிகளை அனுமதித்தால், நீட் போல நாளை புதிய கல்வி கொள்கையும் தமிழகத்தில் நிர்ப்பந்தபடுத்தப்படும் என கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். எதிர்காலத்தில் அரசு இது குறித்து என்ன முடிவெடுக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “