மும்பை பாய் ஆன ஷிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆறுச்சாமி ஆன வரலாறு!

IPL 2024 Shivam Dube The Hitory Of CSK Aaru Saamy Idamporul

IPL 2024 Shivam Dube The Hitory Of CSK Aaru Saamy Idamporul

மும்பையில் பிறந்த ஷிவம் துபே, தனது 6 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட துவங்கி விட்டார். அப்பா பல தொழில்களுக்குள் இறங்கி அனைத்திலும் தலையில் துண்டை போட்டவர் தான், பல்வேறு குடும்ப சூழ்நிலைகளுக்கு மத்தியில் தனது 14 வயதில் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சால், தனது பள்ளி அணியை கோப்பையை ஜெயிக்க வைக்கிறார். அன்று தான் ஒரு கிரிக்கெட் நட்சத்திரம் பிறந்தது என்றே சொல்லலாம்.

ஆனாலும் அதற்கப்புறம் குடும்ப சூழல், உடல் பருமன், இன்னும் சில பெர்சனல் காரணங்களால் துபேவால் விளையாட முடியாமல் போகிறது. அதற்கு பின்னர் 5 வருடங்கள் கழித்து பத்து கிலோ எடையை குறைத்து மீண்டும் கிரிக்கெட்டிற்குள் நுழைகிறார். ஆரம்ப காலக்கட்டங்களில் பவுலராகவே அறியப்பட்ட ஷிவம் துபே, சையது முஸ்டாக் அலி தொடருக்கு பின்னர் பவர் ஹிட்டராக அறியப்பட்டார். ஹைலைட்டாக சொல்ல வேண்டுமானால் பிரவீன் தம்பி அவர்களின் பந்து வீச்சில் 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அது தான் அவரை யார் என்று திரும்பி பார்க்க வைத்த சமயம்.

அதற்கு பின் தொடர்ந்து பல்வேறு டொமஸ்டிக் போட்டிகளில் விளையாடிய ஷிவம் துபே, ஐபிஎல் ஆக்சனில் முதன் முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்காகவே விளையாடினார். அவரது பவர் ஹிட்டிங் திறமையை உணராத பெங்களுரு நிர்வாகம் அவரை பல போட்டிகளில் பெஞ்சிலேயே தான் உட்கார வைத்தது. தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக பெங்களுரு அணியின் வாட்டர் பாயாக தான் செயல்பட்டு வந்தார். அதற்கு அடுத்து ராஜஸ்தான் அணி அவரை ஏலத்தில் எடுத்தது, அங்கும் அவருக்கான சரியான வாய்ப்பு கிட்டவில்லை.

2022 ஐபிஎல் ஆக்சன், ஷிவம் துபேவை சென்னை அணி விலைக்கு வாங்குகிறது. போட்டிக்கு முன் வலை பயிற்சி மேற்கொண்ட ஷிவம் துபே, பவுலர்கள் போடும் அனைத்து பந்துகளையும் கிரவுண்டுக்கு வெளியே அடித்துக் கொண்டு இருந்தார். அவரின் அசாத்திய திறமையை உட்கொணர்ந்த சென்னை நிர்வாகம், தொடர்ந்து அவரை அணியில் பிளேயிங் 11-யில் வைக்க முடிவு செய்தது. தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளை கொடுத்து, அவரின் அழுத்தங்களை சரி செய்து, இன்று சிக்ஸர் துபேவாக அவரை நிலை நிறுத்தி இருக்கிறது.

ஆறடி உயரம், காலை க்ரீஸ்சில் இருந்து நகர்த்தாமலே, பவுலர்களின் பந்துகளை விண்வெளிக்கே பறக்க விடுவார். அடிச்சா சிக்ஸ் தான் அதுவும் கிரவுண்டுக்கு வெளில தான், என தனக்குள் ஒரு யுக்தியை வகுத்து வைத்து இருக்கும் ஷிவம் துபேவிற்கு சென்னை ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர் சிக்ஸர் துபே என்ற ஆறுச்சாமி, அதிரடி மன்னன் தோனியே, ஷிவம் துபேவின் பல சிக்ஸர்களை வியந்து பார்த்த தருணங்களும் ஐபிஎல்லில் அரங்கேறி இருக்கிறது. நல்ல வீரர்களை தொடர்ந்து பேக் செய்து அவர்களை மெருகேற்றும் சிஎஸ்கே நிர்வாகத்தால் கண்டு எடுக்கப்பட்ட மற்றும் ஒரு பொக்கிஷம் ஷிவம் துபே என்று சொல்லலாம்.

“ சிஎஸ்கே அணிக்கு மட்டும் அல்ல, இந்திய அணிக்கும் மிடில் ஆர்டரில் ஒரு பவர் ஹிட்டர் கிடைத்து இருக்கிறார், வரும் டி20 உலக கோப்பையிலும் ஆறுச்சாமியின் ஆதிக்கம் இருக்கும் என்பதில் ஐயமில்லை “

About Author

Leave a Reply